Numbers, Facts and Trends Shaping Your World

இந்தியாவில் மதம்: சகிப்புத்தன்மையும் தனிப்படுத்துதலும்

எல்லா மதங்களையும் மதிக்க வேண்டியது அவசியம் என்று இந்தியர்கள் கூறுகிறார்கள், ஆனால் பிரதான மதக் குழுவினரிடத்தில் பொதுவாகக் காணப்படுபவை அதிகம் இல்லை, அவர்கள் தனித்தனியாக வாழ விரும்புகிறார்கள்

இந்தியா காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், : ஒரு புதிய ப்யூ ரிசெர்ச் சென்டர் கருத்தாய்வின்படி, இந்தியர்கள், பொதுவாகத் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்குப் பிந்தைய கொள்கைகளில் ஒன்றாக அனுபவிப்பதாக உணர்வது என்னவென்றால்: பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் கடைப்பிடிப்பதற்கும் முடிகின்ற ஒரு சமூகமாக இருப்பதுதான்.

இந்தியாவின் பெருவாரியான மக்கள்தொகை பன்முகப்பட்டது மற்றும் கடவுள் பக்தி கொண்டது. உலகின் பெரும்பாலான இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர் என்பது மட்டுமல்லாமல், இது உலகிலேயே முஸ்லீம் சமுதாயத்தினர் மிக அதிக எண்ணிக்கையில் வசிக்குமிடங்களில் ஒன்றாகவும், பல இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு இல்லமாகவும் திகழ்கிறது.

2019-இன் பிற்பகுதியிலிருந்து 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் (COVID-19 தொற்றுநோய்க்கு முன்புவரை) இந்தியா முழுவதிலும், மதத்தைப் பற்றிய ஒரு மிகப்பெரிய புதிய கருத்தாய்வு, வயதுவந்தோரிடத்தில் 17 மொழிகளில் நடத்தப்பட்டபடி மற்றும் 30,000 நேருக்கு நேர் பேட்டிகளின் அடிப்படையில், மதப் பின்னணியிலுள்ள இந்தியர்கள் பெருமளவில் தங்கள் மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் சுதந்திரம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தியர்கள், ஒரு தேசம் என்ற முறையில் தாங்கள் யார் என்பதில், மதச் சகிப்புத்தன்மையை ஒரு மையப் பகுதியாகவே பார்க்கிறார்கள். முக்கிய மதக் குழுக்கள் முழுவதிலும், “உண்மையான இந்தியராக” இருப்பதற்கு எல்லா மதங்களையும் மதிக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று பெரும்பாலானோர் கூறுகிறார்கள். சகிப்புத்தன்மை என்பது ஒரு மதம் சார்ந்த மற்றும் குடிமைநலப் பெருமதிப்பாகும்: மற்ற மதங்களை மதித்தல் என்பது தங்கள் சொந்த மதச் சமூகத்தில் உறுப்பினராக இருப்பதன் மிக முக்கியமான பகுதி என்ற அர்த்தம் கொண்டது என்ற பார்வையில் இந்தியர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

இந்தப் பகிரப்பட்ட பெருமதிப்புகள் மத வழிமுறைகளைக் கடந்து பல மத நம்பிக்கைகளிலும் உள்ளன. இந்தியாவில் பெரும்பான்மையான இந்துக்கள் (77%) கர்மாவை நம்புகிறார்கள் என்பது மட்டுமல்லாமல், அதே சதவீதத்தில் முஸ்லிம்களும்கூட அவ்வாறு நம்புகிறார்கள். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (32%) – 81% இந்துக்களுடன் சேர்ந்து – இந்து மதத்தின் மைய நம்பிக்கையான கங்கை நதியின் தூய்மைப்படுத்தும் சக்தியை தாங்கள் நம்புவதாகக் கூறுகிறார்கள். வட இந்தியாவில், 37% முஸ்லிம்களுடன் கூடவே, 12% இந்துக்கள் மற்றும் 10% சீக்கியர்கள், இஸ்லாத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்புடைய ஒரு மாய பாரம்பரியமான சூஃபி வாதத்தை ஏற்புடையதாக நினைக்கிறார்கள். மூத்தவர்களை மதிப்பது தங்கள் மதத்தில் மிகவும் முக்கியமானது என்று எல்லா முக்கிய மதப் பின்னணியிலும் உள்ள பெரும்பான்மையான இந்தியர்கள் கூறுகிறார்கள்.

ஆயினும், சில மதிப்புகள் மற்றும் மத நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொண்டாலும் – ஒரே நாட்டில், ஒரே அரசியலமைப்பின் கீழ் வாழ்ந்தாலும் – இந்தியாவின் முக்கிய மதச் சமூகங்களின் உறுப்பினர்கள் தங்களுக்கிடையே மிகவும் பொதுவானவை அதிகம் இருப்பதாக உணரவில்லை. பெரும்பான்மையான இந்துக்கள் தங்களை முஸ்லிம்களிடமிருந்து (66%) மிகவும் வித்தியாசமாகவே பார்க்கிறார்கள், பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து (64%) மிகவும் வேறுபட்டவர்கள் என்று கூறி அதே உணர்வில் இருக்கிறார்கள். இதில் சில விதிவிலக்குகள் உள்ளன: மூன்றில் இரண்டு பங்கு சமணர்களும், பாதியளவு சீக்கியர்களும் தங்களுக்கும் இந்துக்களுடன் இடையில் பொதுவானவை நிறைய உள்ளன என்று கூறுகிறார்கள். ஆனால் பொதுவாக, இந்தியாவின் முக்கிய மதச் சமூகங்களில் உள்ளவர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாகப் பார்க்க முனைகிறார்கள்.

இந்த வித்தியாச உணர்வு, இந்தியாவின் மதக் குழுக்களின் பிரிவினையைத் தக்க வைத்துள்ள மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களில் பிரதிபலிக்கிறது. பல இந்தியர்கள், பல மதக் குழுக்களிலும், தங்கள் சமூகத்தில் உள்ளவர்கள் பிற மதக் குழுக்களில் திருமணம் செய்வதைத் தடுப்பது மிகவும் முக்கியம் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்கள், இந்துப் பெண்கள் (67%) அல்லது இந்து ஆண்கள் (65%) பிற மதத்தவரை திருமணம் செய்து கொள்வதைத் தடுக்க விரும்புகிறார்கள். பெரும்பான்மையான முஸ்லிம்களும் இதேபோல் உணர்கின்றனர்: முஸ்லீம் பெண்கள் தங்கள் மதத்திற்கு வெளியே திருமணம் செய்வதைத் தடுப்பது மிகவும் முக்கியம் என்று 80% பேரும், முஸ்லிம் ஆண்கள் அவ்வாறு செய்வதைத் தடுப்பது மிகவும் முக்கியம் என்று 76% பேரும் கூறுகின்றனர்.

இந்தியர்களும் தங்கள் சொந்த மதச் சமூகத்தினுள் பெருவாரியாக நட்பை உருவாக்குகிறார்கள் – இது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே மட்டுமல்ல, சீக்கியர்கள், சமணர்கள் போன்ற சிறிய மதக் குழுக்களிடையேயும் உண்மையாகும். பெரும்பான்மையான மக்கள் (ஒட்டுமொத்த இந்தியர்களில் 86%, இந்துக்களில் 86%, முஸ்லிம்களில் 88%, சீக்கியர்களில் 80%, மற்றும் 72% சமணர்கள்) தங்கள் நெருங்கிய நண்பர்கள் முக்கியமாக அல்லது முழுக்க முழுக்கத் தங்கள் சொந்த மதச் சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறார்கள். பல வழிகளில், இந்திய சமூகம் மதச் சமூகங்களுக்கிடையில் தெளிவான பிரிவுகளைக் கொண்ட ஒரு “ஒட்டுப்போட்ட துணியை” ஒத்திருக்கிறது.

இந்தியர்களில் கொஞ்சம்பேர் தங்கள் அண்டை அயலில் தங்கள் சொந்த மதக் குழுவினர் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்குச் செல்கிறார்கள். இருப்பினும், பலர் சில மதத்தினரைத் தங்கள் குடியிருப்புப் பகுதிகள் அல்லது கிராமங்களுக்கு அப்பால் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். உதாரணமாக, பல இந்துக்கள் (45%) மற்ற எல்லா மதங்களைச் சார்ந்த அண்டை அயலாரையும் – அவர்கள் முஸ்லீம், கிறிஸ்தவர்,சீக்கியர், பௌத்தர் அல்லது சமணர்களாக இருந்தாலும் சரிதான் என்று நினைக்கிறார்கள் – ஆனால் அதே அளவிற்குச் சதவீதத்தினர் (45%), இந்தக் குழுக்களில் குறைந்தது ஒன்றைக் கடைப்பிடிப்பவர்களை ஏற்க தயாராக இல்லை என்று கூறுகிறார்கள், இதில் மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட இந்துக்கள் (36%) ஒரு முஸ்லீமை அண்டை வீட்டுக்காரராக இருக்க விரும்பாதவர்கள் என்பதும் அடங்கும். சமணர்களிடையே,பெரும்பான்மையானவர்கள் (61%) இந்தக் குழுக்களில் குறைந்தபட்சம் ஒருவரையாவது அண்டை வீட்டுக்காரராக வைத்திருக்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள், இதில் ஒரு முஸ்லீம் அண்டை வீட்டுக்காரரை ஏற்காத 54% பேரும் அடங்குவர்.

கூடுதலாக அறியப்பட்ட முக்கியக் கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:

  • இந்துக்கள் தங்கள் மத அடையாளமும் இந்திய தேசிய அடையாளமும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதாகக் காண முனைக்கிறார்கள் என்று கருத்தாய்வு கண்டறிந்துள்ளது: இந்துக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர் (64%) “உண்மையான” இந்தியராக இருப்பதற்கு இந்துவாக இருப்பது மிகவும் முக்கியம் என்று கூறுகிறார்கள்.
  • பெரும்பாலான இந்துக்கள் (59%) இந்திய அடையாளத்தை, இந்தியாவில் பரவலாகப் பேசப்படும் டஜன் கணக்கான மொழிகளில் ஒன்றான இந்தி மொழி பேசும் திறனுடன் இணைக்கின்றனர். இந்தி பேசும் திறன் மற்றும் இந்துவாக இருப்பது என தேசிய அடையாளத்தின் இந்த இரண்டு பரிமாணங்களும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. உண்மையான இந்தியராக இருப்பதற்கு இந்துவாக இருப்பது மிகவும் முக்கியம் என்று கூறும் இந்துக்களில், 80% பேர் உண்மையிலேயே இந்தியராக இருப்பதற்கு இந்தி பேசுவது மிகவும் முக்கியம் என்றும் கூறுகிறார்கள்.
  • சீர்தூக்கிப் பார்க்கும்போது, அதிகமான இந்தியர்கள் பன்முகத்தன்மையைத் தங்கள் நாட்டின் சுமையாகக் கருதுவதை விட ஒரு நன்மையாகப் பார்க்கிறார்கள்: இந்திய வயதுவந்தவர்களில் பாதி (53%) பேர் இந்தியாவின் மதப் பன்முகத்தன்மை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கூறுகின்றனர், அதேசமயம் கால் பகுதியினர் (24%) பன்முகத்தன்மையைத் தீங்கானதாகக் கருதுகின்றனர், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே இதே போன்ற புள்ளிவிவரங்கள் உள்ளன.
  • இந்தியாவின் முஸ்லிம்கள் ஏறக்குறைய ஒருமனதாக, அவர்கள் இந்தியர் (95%) என்பதில் பெருமைப்படுவதாகக் கூறுகிறார்கள், மேலும் அவர்கள் இந்தியக் கலாச்சாரத்தில் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்கள்: 85% பேர் “இந்திய மக்கள் சரியானவர்கள் அல்ல, ஆனால் இந்தியக் கலாச்சாரம் மற்றவற்றை விட உயர்ந்தது” என்ற கூற்றுடன் உடன்படுகிறார்கள்.
  • முஸ்லிம்களில் கால் பகுதியினர் தங்கள் சமூகம் இந்தியாவில் “ஏராளமான” பாகுபாடுகளை எதிர்கொள்கிறது (24%) என்று கூறுகிறார்கள். தங்கள் சமூகத்திற்கு எதிராகப் பரவலான பாகுபாட்டைக் காணும் முஸ்லிம்களின் பங்கு, இந்தியாவில் இந்துக்கள் பரவலான மதப் பாகுபாட்டைச் சந்திக்கிறார்கள் (21%) என்று சொல்லும் இந்துக்களின் பங்கை ஒத்ததாக இருக்கிறது.
  • சீக்கியர்கள் தங்கள் இந்திய அடையாளத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் கொள்கிறார்கள். சீக்கியர்களில் ஏறக்குறைய ஓட்டுமொத்தப் பங்கினரும் தாங்கள் இந்தியர்கள் (95%) என்பதில் மிகவும் பெருமைப்படுவதாகவும், பெரும்பான்மையானவர்கள் (70%) இந்தியாவை அவமதிக்கும் ஒருவர் சீக்கியராக இருக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். இந்தியாவின் பிற மதக் குழுக்களைப் போலவே, பெரும்பாலான சீக்கியர்களும் தங்கள் சமூகத்திற்கு எதிராகப் பரவலாகப் பாகுபாடு காட்டப்படுவதற்கான ஆதாரங்களைக் காணவில்லை – 14% பேர் மட்டுமே சீக்கியர்கள் இந்தியாவில் நிறையப் பாகுபாடுகளைச் சந்திக்கின்றனர்.
  • மற்ற மதச் சமூகங்களை விடச் சீக்கியர்கள், சமூக வன்முறையை நாட்டில் ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக அதிகம் பார்க்கிறார்கள். 65% இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில், ஏறக்குறைய பத்தில்-எட்டு-சீக்கியர்கள் (78%) சமூக வன்முறையை ஒரு முக்கியப் பிரச்சினையாக மதிப்பிடுகின்றனர்.
  • பெரும்பாலான இந்தியர்கள் பரவலாகச் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை உணரவில்லை என்று கருத்தாய்வு கண்டறிந்துள்ளது. ஐந்தில் ஒரு இந்தியர், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிராக நிறையப் பாகுபாடு இருப்பதாகக் கூறுகின்றனர், அதே சமயம் 19% பேர் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு எதிராக நிறையப் பாகுபாடு இருப்பதாகவும், சற்றே குறைவானவர்கள் (16%) பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக அதிக அளவு பாகுபாடு காண்பதாகவும் கூறுகின்றனர். தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின உறுப்பினர்கள் தங்கள் இரு குழுக்களுக்கு எதிரான பரவலான பாகுபாட்டை மற்றவர்களை விடச் சற்றே அதிகமாக உணர்கிறார்கள்.
  • பிற சாதிகளைச் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை அண்டை வீட்டாராக (72%) பெறத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக இதேபோன்ற பெரும்பான்மையான இந்தியர்கள் (70%) தங்கள் நெருங்கிய நண்பர்கள் பெரும்பாலானோர் அல்லது அனைவருமே தங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள்.
  • ஒட்டுமொத்தமாக, 64% இந்தியர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள பெண்கள் மற்ற சாதியினரைத் திருமணம் செய்வதைத் தடுப்பது மிகவும் முக்கியம் என்றும், அதே பங்கில் (62%) தங்கள் சமூகத்தில் உள்ள ஆண்கள் மற்ற சாதியில் திருமணம் செய்வதைத் தடுப்பது மிகவும் முக்கியம் என்றும் கூறுகிறார்கள்.
  • அனைத்து முக்கிய மதநம்பிக்கை கொண்டவர்களிலும், பெரும்பான்மையான இந்தியர்கள், தங்கள் வாழ்க்கையில் மதம் மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு பெரிய மதத்தைப் பின்பற்றுபவர்களிலும் குறைந்தது முக்கால்வாசிப்பேர் தங்கள் சொந்த மதம் மற்றும் அதன் நடைமுறைகளைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்திய முஸ்லிம்கள் இந்துக்களை விடச் சற்றே அதிகமாக மதத்தைத் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர் (91% அதற்கெதிராய் 84%). மேலும் முஸ்லிம்கள் இந்துக்களை விடத் தங்கள் சொந்த மதத்தைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதாகக் கூறுகிறார்கள். (84% அதற்கெதிராய் 75%).
  • ஒவ்வொரு மதக் குழுவின் கணிசமான பகுதியினர் தினமும் பிரார்த்தனை செய்கின்றனர், இந்த ஆறு குழுக்களில் கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்க்கையில் மதம் மிகவும் முக்கியமானது என்று கூறுபவர்களில் (76%) மிகக் குறைவானவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் அவ்வாறு பிரார்த்தனை செய்ய அதிக வாய்ப்புள்ளவர்கள் (77%). பெரும்பாலான இந்துக்கள் மற்றும் சமணர்கள் தினமும் (முறையே 59% மற்றும் 73%) பிரார்த்தனை செய்கிறார்கள், மேலும் அவர்கள் வீட்டில் அல்லது ஒரு கோவிலில் தினமும் பூஜை (57% மற்றும் 81%) செய்வதாகக் கூறுகிறார்கள்.
  • ஏறக்குறைய அனைத்து இந்தியர்களும் கடவுளை நம்புவதாகக் கூறுகிறார்கள் (97%), பெரும்பாலான மதக் குழுக்களில் சுமார் 80% மக்கள் கடவுள் இருக்கிறார்கள் என்பதை உறுதியாக நம்புவதாகக் கூறுகிறார்கள். முக்கிய விதிவிலக்கு பௌத்தர்கள் ஆவார்கள், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடவுளை நம்பவில்லை என்று கூறுகிறார்கள். இருப்பினும், கடவுள் ஒருவர் இருப்பதாக நினைக்கும் பௌத்தர்களில், பெரும்பாலானோர் இந்த நம்பிக்கையில் முற்றிலும் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
  • கடவுள் மீதான நம்பிக்கை இந்தியாவில் பரந்துபட்டது என்றாலும், இந்தியர்கள் நம்பும் தெய்வம் அல்லது தெய்வங்களைப் பற்றிய பலவிதமான கருத்துக்களை இந்தக் கருத்தாய்வு கண்டறிந்துள்ளது. நடைமுறையில் உள்ள கருத்து என்னவென்றால், “பல அவதாரங்களுடன்” (54%) ஒரே கடவுள் இருக்கிறார். ஆனால் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்கள் முடிவாகச் சொல்வது: “ஒரே கடவுள் மட்டுமே இருக்கிறார்” (35%). மிகக் குறைவானவர்கள் பல கடவுள்கள் (6%) இருப்பதாகக் கூறுகிறார்கள்.
  • இந்தக் கருத்தாய்வில் கடவுளை தாங்கள் நம்புவதாகக் கூறிய அனைத்து இந்துக்களையும், அவர்கள் எந்தக் கடவுளை நெருக்கமாக உணர்கிறார்கள் என்று கேட்டபோது, பெரும்பான்மையான இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளைத் தேர்ந்தெடுத்தார்கள் அல்லது தங்களுக்குப் பல தனிப்பட்ட கடவுள்கள் (84%) இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்கள். பல கடவுள்களை (90%) அல்லது பல அவதாரங்களைக் கொண்ட ஒரு கடவுளை (87%) நம்புவதாகக் கூறும் இந்துக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஒரே கடவுள் (82%) இருப்பதாகச் சொல்வோர் மத்தியிலும் இது உண்மையாக உள்ளது. இந்துக்கள் பொதுவாகத் தங்களுக்கு நெருக்கமாக உணரும் கடவுள் சிவன் (44%). கூடுதலாக, இந்துக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அனுமன் அல்லது விநாயகருடன் நெருக்கமாக உணர்கிறார்கள் (முறையே 35% மற்றும் 32%).
  • பல இந்தியர்கள் தங்கள் மத நம்பிக்கையுடன் பாரம்பரியமாகத் தொடர்புபடுத்தப்படாத நம்பிக்கைகளைத் தழுவுகிறார்கள்: இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்துக்களைப் போலவே (ஒவ்வொருவரும் 77%), கர்மாவை நம்புபவர்களாக இருக்கிறார்கள் மேலும் 54% இந்திய கிறிஸ்தவர்கள் இந்தக் கருத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட பத்தில் மூன்று முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மறுபிறவியை நம்புவதாகக் கூறுகிறார்கள் (முறையே 27% மற்றும் 29%).
  • பெரும்பாலான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்திய தீபத் திருவிழாவாகப் பாரம்பரியமாக இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்களால் கொண்டாடப்படும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதில்லை என்று கூறுகிறார்கள்,. ஆனால் கணிசமான சிறுபான்மையினர், கிறிஸ்தவர்களில் (31%) மற்றும் முஸ்லிம்களில் (20%) தாங்கள் நிச்சயமாகத் தீபாவளியைக் கொண்டாடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இவையெல்லாம் நாடு முழுவதும் 29,999 இந்திய வயதுவந்தோரிடம் நேருக்கு நேர் நடத்தப்பட்ட ப்யூ ரிசெர்ச் சென்டர் கருத்தாய்வில் கண்டறியப்பட்ட முக்கியமானவைகளில் அடங்கும். உள்ளூர் பேட்டியாளர்கள் நவம்பர் 17, 2019 முதல் மார்ச் 23, 2020 வரை, 17 மொழிகளில் இதனை மேற்கொண்டனர். இந்தக் கருத்தாய்வு இந்தியாவில், 2020 இளவேனிற்காலம் முதல் கோவிட்-19 வெகுவேகமாகப் பரவி, களப்பணிகள் தடைப்பட்ட மணிப்பூர், சிக்கிம் நீங்கலாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 1% இந்திய மக்கள்தொகையில் கால்பாக மக்களுக்கு வாழிடமாக உள்ள அந்தமான் மற்றும் நிகோபார், லட்சத்தீவுகளில் உள்ள தொலைதூர பிராந்தியங்களில் நடத்தப்பட்டது. காஷ்மீர் பிராந்தியத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காகக் களப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் இந்தக் கலந்தாய்வில் சேர்க்கப்பட்டன. பேட்டி காணப்பட்ட 29,999 பேரின் மொத்த மாதிரியில் மாதிரிப் பிழையின் வரம்பு, பிளஸ் / மைனஸ் 1.7 சதவீத பாயிண்ட்கள் ஆகும். இந்தக் கருத்தாய்வு எவ்வாறு நடத்தப்பட்டது என்பது பற்றி மேலதிகத் தகவல்கள் செய்முறையில் தரப்பட்டுள்ளன.

புதிய அறிக்கையின் மிச்சமானது, கருத்தாய்வில் கண்டறியப்பட்டவற்றை மேலும் ஆழமாக ஆய்வு செய்கிறது. அத்தியாயம் 1, மதச் சுதந்திரம் மற்றும் பாகுபாடு பற்றிய இந்தியர்களின் கண்ணோட்டங்களை விவரிக்கிறது. அத்தியாயம் 2, இந்தியாவில் நிலவும் மத வேறுபாடு மற்றும் பன்மைவாதம் ஆகியவற்றை ஆய்வுசெய்கிறது. அத்தியாயம் 3, மதப் பிரிவுகள் மற்றும் கலப்பு மணம் பற்றிய கண்ணோட்டங்களை ஆராய்கிறது. அத்தியாயம் 4, சாதி பற்றிய இந்தியர்களின் மனோபாவங்களை அறிவிக்கிறது. அத்தியாயம் 5, இந்தியாவில் மத அடையாளத்தின் உறுப்புகளை ஆய்வுசெய்கிறது. அத்தியாயம் 6, இந்திய தேசியவாதம் மற்றும் அரசியலில் மதத்தின் பங்கு பற்றிக் கூர்ந்து நோக்குகிறது. அத்தியாயம் 7, இந்தியாவில் உள்ள மதச் செயல்பாடுகளை விவரிக்கிறது. அத்தியாயம் 8, குழந்தைகளிடத்தில் மதம் எவ்வாறு கொண்டுசெல்லப்படுகிறது என்பதைப் பகுப்பாய்வு செய்கிறது. அத்தியாயம் 9, மத ரீதியான ஆடைகள் பற்றிக் கருத்தாய்வில் கண்டறியப்பட்டவை குறித்த விவரங்களை அளிக்கிறது. அத்தியாயம் 10, உணவு மற்றும் மதத்தின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது. அத்தியாயம் 11, இந்தியாவில் உள்ள மத நம்பிக்கைகளை ஆய்வு செய்கிறது. அத்தியாயம் 12, கடவுள் மீதான இந்தியர்களின் நம்பிக்கையை விவரிக்கிறது.

தி ப்யூ சாரிட்டபிள் ட்ரஸ்ட்ஸ் மற்றும் ஜான் டெம்பிள்டன் ஃபவுண்டேஷன் ஆகியவற்றின் நிதியளிப்பு பெற்ற இந்த ஆய்வானது, உலகம் முழுவதும் சமய மாற்றங்கள் மற்றும் சமூகங்களின் மீது அதன் தாக்கம் பற்றிய புரிதலுக்காக ப்யூ ரிசெர்ச் சென்டர் மேற்கொண்டுவரும் ஒரு பாரிய முயற்சியின் ஓர் அங்கமாகும்.

ப்யூ ரிசெர்ச் சென்டர் ஆனது உலகில் மாற்றத்தைக் கொண்டுவரும் பிரச்சினைகள், மனோபாவங்கள் மற்றும் போக்குகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கிற ஒரு நடுநிலையான ஃபேக்ட் டாங்க் ஆகும். இந்த சென்டர், இதற்கு முதன்மை நிதி வழங்குநரான ப்யூ சாரிட்டபிள் ட்ரஸ்ட்ஸ்-இன் துணை நிறுவனமாகும்.

முழு அறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க, இந்த இணைப்பிற்குச் செல்லவும்: https://www.pewresearch.org/religion/2021/06/29/religion-in-india-tolerance-and-segregation

அறிக்கையின் கண்ணோட்டத்தை இந்தியில் படிக்க, இந்த இணைப்பிற்குச் செல்லவும்: https://www.pewresearch.org/religion/wp-content/uploads/sites/7/2021/06/PF_06.29.21_India_overview_Hindi.pdf

 

கண்டறியப்பட்டவற்றின் சுருக்கவுரை, ஆங்கில மூலப் பதிப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

 

Icon for promotion number 1

Sign up for our weekly newsletter

Fresh data delivery Saturday mornings

Icon for promotion number 1

Sign up for The Briefing

Weekly updates on the world of news & information